Tuesday 2 October 2012

சலனங்களின் வரைபடமாக இக்கவிதையைச் சுட்டுகிறேன்.




எழுதியவர் பொன். வாசுதேவன்
தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை.

கூர்ந்த கரும் அம்பாக
நீண்டு மல்லாந்திருந்த சாலையில்
வாழ்வு குறித்த யோசனைகளோடு
பயணம் செய்துகொண்டிருக்கிறாள் இவள்

இரு புற மரங்களிலிருந்து
தற்கொலை செய்து
கொண்டிருக்கின்றன பூக்கள்

உடைத்தெறியப்பட்ட
சிறு சுள்ளியொன்றை
இவளருகில் வீசி
செல்கிறது காற்று

தூசிகளைப் பொறுக்கியபடி
விரைகிறது கார் சிற்றிரைச்சலோடு

யாருடைய கவனத்தையும்
ஈர்க்காமல் வழிகிறது
பண்பலை வரிசையின் பாட்டொலி

அலைபேசி வழி பேச்சு
காதுகளில் வருடுகிறது

நியதிகளுக்குட்பட்டு
எபோதும் கேட்கிற கேள்விதான்

“ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்”

“பாதி வழியில் போகிறேன்”  என்று.

மிகச்சரியான வார்த்தைகளால் எளிமையோடு தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறது இக்கவிதை. கவிதையில் வரும் அல்லது போகும் இவளை எதுவும் தொந்தரவுசெய்யாதபடி என்றே கவிஞரய்யா உருவகப்படுத்துகிறார்,பூக்கள் அலறல் இல்லாது தற்கொலை செய்து கொண்டிருந்தன. இங்கு தற்கொலையைச் செய்தபடியாக,அல்லது தற்கொலையை செய்து பார்க்கும் மலராகவும் நாம் கற்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக மலர்கள் தற்கொலையைச் செய்து பார்க்கின்றனதான். 

தூசிகளை பொறுக்கி விரைந்தாலும் கார் சிற்றிரைச்சலோடுதான் போகிறது. கவனத்தையும் ஈர்க்காமல் வழிகிறது பண்பலை வரிசையின் பாட்டொலி என்கிறார். பாட்டொலியைக் கவிஞர் கவனிக்காது விட்டிருந்தால் அது இரைச்சலாகவோ இல்லை ஏதேனும் ஒரு சத்தமாகவோ இன்னும் கேட்டதாகவோ சொல்லலாம் ஆனால் கவிஞரய்யா வழிகிறது என்று சொல்வதில் உள்ள கவித்துவம் கவிதையை முழுவடிவத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது. 

இடையில் வரும் அலை பேசி பேச்சு காதுகளில் வருடவும் செய்கிறது. போகும் இவளைக் கண்காணிக்க வரும் சப்தங்கள் இவை. ஆனால் கேள்வி அனாந்தரத்திலிருந்து வருகிறது. எங்கே போய்க் கொண்டிருக்கிறாய். கவனியுங்கள் எல்லா சப்தங்களும் அவளைத் தொந்தரவு செய்யாமல் இருக்கையில் கேள்வி வருகிறது. சற்றும் யோசனையில்லாத நிலையைக் குறித்து கவிஞரய்யா சொல்வது அனிச்சையாய் பதில் சொல்கிறாள் என்று. நியதிகளுகுட்பட்டு எப்போதும் வருபவைகள் கேள்விகள் மட்டுமே என தனது கவித்துவத்தைப் பதிந்துவிடுகிறார். இது கவிதைக்கான நிகழ்வாக அமைந்துவிடுகிறது.

இக்கவிதையில்  நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துமே அனிச்சை செயல்களாய் அமைத்திருக்கும் கவிஞர், உண்மையில் தன் கவிதையை அனிச்சையாகவே விட்டுச் செல்கிறார். மிகமுக்கியமாக கூர்ந்த அம்பாக என்று சாலையைச் சொல்லும்போது இவரின் படிம நேர்த்தி வியக்கச் செய்கிறது. வாசிக்கலாம் வாசகர்களே….


2 comments:

  1. எனது கவிதை பற்றிய உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி. 1989 செப்டம்பரில் கணையாழியில் ‘மொழி‘ என்ற என்னுடைய முதல் கவிதை வெளியானது. அதே வருடம் அக்டோபர் மாதத்தில் ‘விருட்சம்‘ இதழில் ‘அறிமுகக் கவிஞர்‘ என்று குறிப்பிட்டு என்னுடைய கவிதை வெளியானது. தொடர்ந்து அப்போது வெளிவந்த முன்றில், நவீன கவிதை, மய்யம், செந்தூரம் என பல சிற்றிதழ்களிலும், சுபமங்களா, புதிய பார்வை, காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். விருட்சம் கவிதைகள் முதல் தொகுதியிலும், 1990 - 2000 களில் எழுதிய கவிஞர்களை தொகுத்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘100 கவிஞர்கள்‘ தொகுப்பிலும், வம்சி பதிப்பகம் வெளியிட்ட ‘கிளிஞ்சல்கள்‘ தொகுப்பிலும் என்னுடைய கவிதை வெளியாகியுள்ளது. நான் எழுத ஆரம்பித்து 20 வருடங்கள் கழித்து 2010 ல் ‘ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை‘ என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கவிதை பற்றிய உங்களுடைய உரையாடல் செயல்பாட்டை வரவேற்கிறேன். எழுதுகிற எல்லாமே கவிதையாகி விடாது என்பதை நான் நம்புகிறேன். அதேபோல விமர்சனத்தினால் கவிதையை கவிதையில்லை என்றும், கவிதை என்றும் வரையறை செய்துவிடவும் முடியாது. உங்களது முயற்சி தொடரட்டும்.

    *

    ReplyDelete
  2. நல்லதொரு கவிஞரின் கவிதையை பற்றிய பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete